Wednesday, December 15, 2010

சோனியா காந்தியின் பிதற்றல்..................
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சியான பா.ஜ.க.,வின் எதிர்ப்பிற்கு பொறுப்புள்ள ஆளுங்கட்சியின் தலைவரான சோனியாவின் பதில் சிறுபிள்ளைகூட சிரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது....அந்த பதில் இல்லை கத்தல் என்றே சொல்லலாம் ...அது" ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள எடியுரப்பாவை பதவியை விலக்க யோசிக்கும் பா.ஜ.க., ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி பேச அருகதை இல்லையென்று" தன் வெறுப்பின் உச்சத்தை வெளிபடுத்தியுள்ளார்...கேள்விக்கு உண்டான பதிலை தேடாமல் தன் குற்றத்துக்கு சப்பைக்கட்டு கட்டிகொண்டிருக்கிறார் சோனியா....இதை போன்ற அபத்தங்களை மக்கள் கண்டு பொங்கி எழும் நேரம் வந்துகொண்டேயிருக்கிறது ,அதனை மனதில் கொண்டாவது பொறுப்புள்ள ஆளாக நடக்க முயற்சியுங்கள்.....
                                                                                                                                                                                                               - சேபி - 

Tuesday, December 14, 2010

தொப்புள்கொடியை அறுத்தபோதும் உறவுதந்தவளை...
தாலிக்கொடிக் கட்டியவுடன் வெட்டிவிடுகிறாய்...
முதியோர் இல்லத்தில் உன் தாய்....

Friday, December 10, 2010

பாரதியின் கனவு " ஐரோம் ஷர்மிளா"


மாதவரை பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா

பெண்ணை தெய்வமாக மதிக்கும் இந்தியா பெண்மைக்கு எதிராக ராணுவத்தின் மூலம் நடத்தும் வேசித்தனத்தை எதிர்க்கும் பெண் போராளிதான் இந்த ஐரோம் ஷர்மிளா
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள்.
மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது.
ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக் ‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!


நம் எல்லாருக்கும் நூறு படம் நடித்த ரஜினி விஜயகாந்த் போன்றவர்கள் தெரியும். நூறு ரன் அடிக்கும் சச்சின் என்றால் தெரியும்.பத்து வருடம் சாப்பிடாமல் கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்தவரை தெரியுமா. நமக்கு தெரிந்தது பத்தரை முதல் பன்னிரெண்டரை மணி வரை உண்ணாவிரதம் கண்ட தமிழினத் தலைவரை தெரியும்.
எனக்கு நேற்று ஒரு தோழர் மூலமாய் அவரை பற்றி தெரிந்தது. வெட்கமாய் இருந்தது நமக்கு அவரை பற்றி தெரியவில்லை .பதிவு போடும் நாம் செயலிலே என்ன செய்துவிட்டோம். நூறு பதிவுகளும் அந்த பெண் தோழருக்கு தூசுக்கு சமம்.
ஐரோம் சர்மிளா ஆம் அந்த தோழரின் பெயர். அவர்கள் பத்து வருடமாய் சாப்பிடமால் இருக்கிறாள். வெறும் திரவ உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். சர்மிளா ஒரு கவிஞர் மற்றும் செயல் வீரர். அப்படி எந்த கொள்கைக்காக அவர் இவ்வளவு நாள் சாபிடாமல் இருக்கிறாள். 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்.
இந்த சட்டத்தினால் அப்பாவி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பெண்கள் பாலியல் வல்லுறவுகள் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கபடுகின்றனர். ஆம் ஆண்டு பெண்கள் ARMY RAPE US என்று படத்துடன் ராணுவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர் பெண்கள் இதை நன்றாக பயன்படுத்தி மக்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றது ராணுவம். பல கொலைகள் செய்யப்பட்டன. நவம்பர் 2 2000 மணிப்பூர் மாலோம் என்னும் இடத்தில் பத்து குடிமக்களை இந்திய ராணுவம் கொலை செய்ததை கண்டித்து ஐரோம் சர்மிளா அவர்கள் உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்தார் இன்னும் அவர் சாப்பிடவில்லை திரவ உணவையே அருந்துகிறார்.
அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தண்ணீர் கூட உண்ணாமல் இருந்தார் . அவர் உடல் மோசமடையவே அன்றில் இருந்து மூக்கு வழியாக பிளாஸ்டிக் குழாய் கொண்டு திரவ உணவு செலுத்த படுகிறது. அரசாங்கம் அமைத்த ஜீவன் ரெட்டி கமிசன் கூட இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது.
சரி ஏன் இந்த சட்டம் போட்டது இந்தியா உண்மையிலேயே சுதந்திர நாடா. வட கிழக்கில் உள்ளவர்கள் ஏன் ஒதுக்க படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் கூட ஏன் பறிக்க படவேண்டும். ஏன் நம்முடைய ஆதிக்கத்தை காட்ட வேண்டும்.இப்படி கட்டி காத்து தான் வல்லரசு என்று காட்ட வேண்டுமா .அந்த மக்களுக்கு உண்மையிலேயே இந்தியாவில் இருக்க பிடித்து இருக்கிறதா. நாம் எல்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் அது உருவாக்க படுவது யாரால்????நம் அரசால்??? அந்த அரசை ஆதரித்து காசு வாங்கி வாக்கு செலுத்துகிறோம்?? அப்பொழுது நமக்கும் தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்கிறது தானே....???
நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுகிறோம் ஆனால் அதன் ஆணி வேர் அரசிடம் உள்ளது . ஏன் வடகிழக்கு மக்கள் கண்டுகொள்ள படவில்லை . நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுவது உண்மையிலேயே மணிரத்தனம் ரோஜா படம் போல அரை வேக்காட்டு தனம். நமக்கு உண்மையிலேயே தெரியுமா அந்த மக்களுக்கு இங்கே வாழத்தான் பிடிக்கிறது என்று????


ஐரோம் சர்மிளா உனக்கு தலை வணங்குகிறேன். என்ன சொல்ல இளமையை அடக்கி பெண்டீருக்கு உள்ளான ஆசையை அடக்கி, நாவை அடக்கி, ஒரு சமூகத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறாய். நாமெல்லாம் பதிவுகள் போட்டுக்கொண்டு என்ன செய்துகொண்டிருக்கிறோம், ஏன் சிறு பிரச்சனை என்றால் கூட திரும்பி பார்க்காமல் வருகிறோம். ஐரோம் சர்மிளாவும் கவிஞர் நானும் கவிஞரே ஆனால் அதற்கு வித்யாசம் உண்டு. இலக்கிலாமல் இருப்பது இலக்கியாமா என்ன. நோபல் பரிசு கொடுக்க வேண்டாம்
அவரை தெரிந்தாவது வைத்திருக்கலாமே.